போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி


போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 28 Feb 2022 7:13 PM IST (Updated: 28 Feb 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட நூலகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

மாவட்ட நூலகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. 

சிறப்பு பயிற்சி மையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2, குரூப்-2(ஏ) எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டில் போட்டி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் அதற்கான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கவும், தேர்வில் வெற்றி பெறும் வகையிலும் ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. 

இந்த மையத்தில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் புத்தகங்களை தேர்வு செய்து அங்கேயே அமர்ந்து படித்துக்கொள்ளலாம். இதற்காக மேஜைகள், இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. 

மாலை 5 மணி வரை...

கணினியில் கடந்த சில ஆண்டுகளாக போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள், அவை எந்தெந்த பிரிவில் கேட்கப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கியிருக்கிறது. இதனை போட்டித் தேர்வுக்கு தயாராகிறவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் போட்டி தேர்வை எளிதில் அணுக முடியும். அங்கு இலவசமாக புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட மைய நூலக அலுவலர் ஜோதிமணி கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2, குரூப்-4, ஆசிரியர் தகுதி தேர்வு, குடிமைப்பணி தேர்வு, நீட், போலீஸ், ராணுவம், டி.ஆர்.பி. உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் தனி புத்தகங்கள் உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுக்கு தயாராகும் நபர்கள் புத்தகங்களை படித்து செல்லலாம். 

வாட்ஸ்-அப் குழு

பள்ளியில் இருந்தே புத்தக வாசிப்பு இருந்தால் போட்டி தேர்வை எளிதில் அணுகலாம். போட்டி தேர்வர்கள் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தினசரி நாளிதழ்களை வாசிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்காகவும், போட்டித்தேர்வை எதிர்கொள்ளவும் 236 பேர் அடங்கிய வாட்ஸ்-அப் குழு மாவட்ட மைய நூலகம் மூலம் தொடங்கப்பட்டது.

இதில் போட்டித்தேர்வு அறிவிப்பு, கேட்கப்படும் கேள்விகள், பாடப்பிரிவு விவரங்கள் பதிவிடப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story