திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே 14-ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் நிச்சயம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 29). இவரது தாய் ஏற்கனவே இறந்த நிலையில் தந்தை பாலுவுடன் வசித்து வந்தார். வாலிபர் சரத்குமாருக்கு வருகிற 14-ந் தேதி பெரியபாளையம் கோவிலில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவரது பாலு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக வெளியே சென்று விட்டார்.
இதற்கிடையே, வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சரத்குமார், பிற்பகல் 2 மணி அளவில் வீட்டிற்கு சாப்பிட்டு வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
வாலிபர் தற்கொலை
வெகு நேரமாகியும்,திருமணம் நிச்சயிக்கப்பட்ட சரத்குமாரை காணவில்லை என்றவுடன், நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு புடவையால் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் அவர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story