மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தவசி (வயது 26). நேற்று இவர், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்தனர். மேலும் அவருடைய உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வாங்கித் தருவதாக ஒரு தொண்டு நிறுவனத்தினர் கூறினர்.
அதை உண்மை என நம்பி 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வாங்கிக் கொடுக்க, அந்த தொண்டு நிறுவனத்தினரிடம் பல தவணைகளாக ரூ.7¼ லட்சம் கொடுத்தேன். ஆனால் நலத்திட்ட உதவிகள் வாங்கித் தராமல் ஓராண்டாக ஏமாற்றி வருகின்றனர்.
இது குறித்து மனு கொடுக்க வந்த போது விரக்தியில் தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதையடுத்து அவருக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
அண்ணனுக்காக தம்பி
இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த சின்ன பள்ளப்பட்டியை சேர்ந்த முருகபாண்டி (55), அவருடைய தம்பி தென்னரசு (51) ஆகியோர் மனு கொடுக்க வந்தனர். அப்போது தென்னரசு தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் விரைவாக செயல்பட்டு அவரை தடுத்து மீட்டனர்.
போலீசாரிடம் அவர் கூறுகையில், முருகபாண்டியின் சொத்துகளை உறவினர்கள் பறித்து கொண்டதால் 2 பேரும் மனு கொடுக்க வந்தோம். அப்போது அவருக்காக தான் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து 2 பேருக்கும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story