‘அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள்’
‘தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன’ என்று முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் குற்றம் சாட்டினர்.
வேடசந்தூர்:
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, தி.மு.க. அரசை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது, சென்னையில் தகராறு செய்த தி.மு.க.வை சேர்ந்தவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் அவர் மீது பொய்யான வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அ.தி.மு.க.வினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதே உதாரணம் ஆகும்.
தமிழகத்தில் தற்போது மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் வெல்லவில்லை. பணநாயகமே வென்றுள்ளது. பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையில் தி.மு.க. உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, 505 பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 9 மாத காலமாக உள்ளாட்சிகளுக்கு எந்தவித நிதியையும் தி.மு.க. அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் எந்த பணியும் நடைபெறவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில், திண்டுக்கல்லில் பிரமாண்டமான மருத்துவ கல்லூரி கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான என்னையோ, அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையோ அழைக்கவில்லை. அழைப்பிதழில் பெயர் கூட போடவில்லை.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
மக்களை திசை திருப்ப...
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து, தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்து விட்டனர். மக்களை திசை திருப்புவதற்காகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் போலீசாரை ஏவி விட்டு அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகளை போடுகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் நாங்கள் தான் மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இதேபோல் அ.தி.மு.க.வின் சாதனை திட்டங்களை எல்லாம், தாங்கள் கொண்டு வந்ததை போல தி.மு.க.வினர் பொய் பேசி வருகின்றனர். எப்போதுமே நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். மக்களை ஏமாற்றுவதும் குற்றம் தான்.
தற்போது பணம் இல்லை, பணம் வரும்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று ஒரு அமைச்சரே கூறுகிறார். தனக்கு அதிகாரமே இல்லாத நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி வாக்குறுதி கொடுத்து மக்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் வரவேற்றார். தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. உதயகுமார், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார், சுப்புரத்தினம், நகர செயலாளர்கள் ஸ்ரீதர் (கொடைக்கானல்), முருகானந்தம் (பழனி), நடராஜன் (ஒட்டன்சத்திரம்), அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சவடமுத்து மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story