வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் தரிசனம்


வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் தரிசனம்
x
வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் தரிசனம்
தினத்தந்தி 28 Feb 2022 8:38 PM IST (Updated: 28 Feb 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் தரிசனம்

பேரூர்

கோவைக்கு மேற்கே தென்கயிலாயம் என்று அழைக்கப்படும், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள, கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள 6 மலைகளை பக்தர்கள் மூங்கில் தடி உதவியுடன் கடந்துச் சென்று, 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள கிரிமலை ஆண்டவரை தரிசிக்கின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை-1-ந்தேதி ஆகிய விசேஷ காலங்களில், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கிரிமலை ஆண்டவரை தரிசித்து வருகின்றனர். 

இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக, பக்தர்களுக்கு மலையேற தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதாலும், அரசு சார்பில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தாலும், இன்று மகா சிவராத்திரி என்பதால், நேற்று காலை முதலே பூண்டி வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில் அடிவாரத்திலிருந்து மலையேறத் தொடங்கினர். 

கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பக்தி கோஷமுழக்கத்துடன் ஆர்வமுடன் மலையேறினர். இதைத்தொடர்ந்து, 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் கிரிமலை ஆண்டவரை தரிசித்துவிட்டு, பயபக்தியுடன் திரும்பினர். 

மேலும், கடந்த ஓரிரு நாட்களாக மலையேறும் பக்தர்களிடம் வனத்துறையினர் கட்டணமாக  ரூ.100 வசூலித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு காரணமாக  ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, நேற்று காலை,மலையேறிய பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1 More update

Next Story