டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.7¾ கோடி வசூல்


டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.7¾ கோடி வசூல்
x
தினத்தந்தி 28 Feb 2022 11:02 PM IST (Updated: 28 Feb 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

மதுரை கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.7¾ கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 
மதுரை கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.7¾ கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
முறையற்ற ரெயில் பயணம்
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரெயில்களில் லட்சக் கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த ரெயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இதையடுத்து ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் அதிரடியாக டிக்கெட் பரிசோதனைகள் நடக்கின்றன.
அந்த சமயத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள், பதிவு செய்யப்படாத உடைமைகளை கொண்டு வருபவர்கள், வேறு ஒருவரின் பெயரில் உள்ள டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் பிடிபடுவது வழக்கம்.
ரூ.7¾ கோடி 
அந்த வகையில் தெற்கு ரெயில்வேக்கு உள்பட்ட ரெயில்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி மாதம் 27-ந்தேதி) வரை நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் டிக்கெட் இல்லாமல் பயணித் தவர்கள் உள்பட பலதரப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.83.99 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 22.9 சதவீதம் அதிகம்.
இதே காலகட்டத்தில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில்களில் திடீர் பரிசோதனை நடத்தியதில், மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் டிக்கெட் இல்லாமல் பல்வேறு ரெயில்களில் பயணித்து, பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.7 கோடியே 79 லட்சத்தை அபராதமாக வசூலித்து உள்ளனர்.
அதேபோல சென்னை கோட்டத்தில் 6.33 லட்சம் பேரிடம் ரூ.29 கோடியே 86 லட்சத்தை டிக்கெட் இன்றி பல்வேறு ரெயில்களில் பயணித்தவர்களிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. 
இதையடுத்து ரெயில்களில் உரிய டிக்கெட் பெற்று அடையாள அட்டையுடன் முறையாக பயணம் செய்யவும், அனுமதிக்கப்பட்ட உடைமைகளை மட்டும் தங்களுடன் எடுத்துச்செல்லும்படி ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

Next Story