தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது


தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 March 2022 6:11 PM IST (Updated: 2 March 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கோனேரிக்குப்பம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 53). தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி சைலஜா. தி.மு.க. பிரமுகரான சேகர் கடந்த மாதம் 25-ந்தேதி கோனேரிக்குப்பத்தில் உள்ள தலையாரி தெரு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் ஆகியோர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை தேர்தல் முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது சம்பந்தமாக கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் ஆகியோரது உத்தரவின்பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர், மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், முரளி ஆகியோர் தலைமையில் ஒரு தனிப்படையும் என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கோனேரிக்குப்பத்தை சேர்ந்த இளவரசன் (26), சக்தி என்ற சதீஷ்குமார் (23), அஜித் (25), ரங்கா (19) ஆகியோரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story