தெற்கு ரெயில்வே அதிகாரிகளுடன் மத்திய இணை மந்திரி ஆய்வு கூட்டம்
மத்திய ரெயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷ் நேற்று சென்னை தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தர்ஷனா ஜர்தோஷ் தலைமையில், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்யா, ரெயில்வேயின் பல்வேறு துறை முதன்மை துறை தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில், ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு மற்றும் பயணிகள் வசதிக்காக நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஏ.கே.அகர்வால், இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷிடம் விளக்கினார். மேலும், தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் தற்போதைய திறன் அதிகரிப்பு மற்றும் முன்முயற்சி நடவடிக்கைகள், பயணிகளுக்கான வசதிகள் குறித்து தர்ஷனா ஜர்தோஷ் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிர்பயா நிதியின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்தார். அதேபோல், அனைத்து ரெயில் பாதைகளையும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷ் பரிந்துரைத்தார். முன்னதாக சென்னை ஐ.சி.எப்.பில் இலங்கை நாட்டுக்காக தயாரிக்கப்பட்ட மின்சார ரெயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story