டாப்சிலிப் அருகே காலில் காயம் அடைந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி சாவு
டாப்சிலிப் அருகே காலில் காயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
பொள்ளாச்சி
டாப்சிலிப் அருகே காலில் காயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
யானை இறப்பு
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே வனப்பகுதியில் 5 வயதான குட்டி பெண் யானை காயங்களுடன் நின்று கொண்டிருந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் கும்கி யானைகள் உதவியுடன் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து யானையை லாரியில் பத்திரமாக ஏற்றி கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கு தற்காலிகமாக மரக்கூண்டு தயார் செய்யப்பட்டது. அந்த மரக் கூண்டில் யானையை அடைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பேராசிரியர் டாக்டர் தர்மசீலன் தலைமையில் மருத்துவ குழுவினர் வந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் மரக் கூண்டில் நின்ற யானை நேற்று காலை திடீரென்று மயங்கி விழுந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை டாக்டர்கள், உடலை பரிசோதித்த போது காட்டு யானை இறந்தது தெரியவந்தது.
வனப்பகுதியில் புதைத்தனர்
இதைத்தொடர்ந்து இறந்த யானையின் உடலுக்கு உதவி வனபாதுகாவலர் செல்வம், வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் பாகன்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் யானையின் உடலை வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். உலக வன உயிரின தின நாளில் காட்டு யானை இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இறந்த குட்டி பெண் யானைக்கு 5 வயதாகிறது. மற்ற யானையுடன் ஏற்பட்ட மோதலில் யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. காயத்திற்கு மருந்து போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் யானையின் உடல் முழுவதும் கிருமி பரவியதால் இறந்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் யானையின் உடலில் இருந்து பாகங்கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பிறகு யானை இறப்பிற்கான முழு விவரமும் தெரியவரும் என்றனர்.
Related Tags :
Next Story