சுவரில் துளையிட்டு அடகு கடையில் ரூ.26 லட்சம் நகை, பணம் கொள்ளை
வந்தவாசி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சுவரில் துளை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளார் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர், தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒட்டியுள்ள காம்ப்ளக்சில் அடகுக்கடை வைத்துள்ளார்.
இவரது கடைக்கு பக்கத்தில் அகரகொரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த குலாப் என்பவர் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இருவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடைகளை மூடிவிட்டு சென்றனர்.
நேற்று அதிகாலையில் குலாப் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த கடையை திறந்து பார்த்த போது, அந்த கடைக்கும் அடகுக் கடைக்கும் பொதுவான சுவரில் துளையிட்டு இருப்பது தெரியவந்தது.
அடகு கடையில் கொள்ளை
இதையடுத்து அடகுக்கடை உரிமையாளர் சரவணனை போலீசார் வரவழைத்து அவரது கடையை திறந்து சோதனை செய்தனர்.
அப்போது துளையிட்ட சுவர் வழியாக அடகு கடையின் உள்ளே புகுந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராவை துண்டித்து 65 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகள்-பணத்தின் மதிப்பு சுமார் ரூ.26 லட்சம் இருக்கும்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
மேலும், இந்த கடைகளின் அருகில் உள்ள செல்வம் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் தடயவியல் நிபுணர் சுந்தரராஜன் கைரேகைகளை சேகரித்தார்.
பின்னர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story