11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்


11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2022 5:54 AM IST (Updated: 4 March 2022 5:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

தனித்துறை, 31 சதவீத அகவிலைப்படி, புதிய விற்பனை முனையம், ஓய்வூதியம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ரேஷன் கடை ஊழியர்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பி.கே.சிவக்குமார், பொதுச் செயலாளர் ரா.பிச்சமுத்து, பொருளாளர் கு.சரவணன் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:-

11 அம்ச கோரிக்கைகள்

அரசு அறிவிக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்கள்தான் முதலில் வழங்குகிறோம். கொரோனா காலத்திலும் விடுமுறைகூட இல்லாமல், எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்து வந்தோம். ஆனாலும் எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்காமல் உள்ளது. ஏற்கனவே மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் நாங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எங்களது கோரிக்கையான தனித்துறையை உருவாக்கி, அரசு பணியாளர்களுக்கு வழங்குவதுபோல் 31 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புதிய விற்பனை முனையம் வழங்கவேண்டும். ‘சர்வர்’ பிரச்சினை ஏற்படுவதால், இணையதள வசதிக்காக மோடம் வழங்க வேண்டும். அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தரமானதாக வழங்கி, சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். கொரோனா நிவாரண தொகை, ஊக்கத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

போக்குவரத்து மாற்றம்

பின்னர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியதால், கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் நேற்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story