திருத்தணியில் அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
திருத்தணியில் அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் செய்யும் சாகசங்களால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு போலீசார் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நல்லாட்டூர் வரை செல்லும் டி.71 அரசு பஸ்சில் பள்ளி மாணவ- மாணவிகள் தினமும் காலை பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் மீண்டும் வீடு திரும்புகின்றனர். திருத்தணியில் உள்ள அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு பஸ்சை நம்பியே உள்ளனர். இந்த வழிதடத்தில் போதுமான பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பின்பக்க ஏணிகளில் தொங்கி கொண்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பஸ் செல்லும்போது கால்களை தரையில் உரசியபடியே நீண்டதூரம் சென்றது பார்பவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ஆபத்தை உணராமல் மாணவர்கள் செய்யும் சாகசங்களால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story