‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 5 March 2022 8:07 PM IST (Updated: 5 March 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

கோத்தகிரி பஸ் நிலையம் அருகில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இதை சுற்றி வளர்ந்துள்ள புதர் செடிகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்த வருகிறது. சில நேரங்களில் நடைபாதையில் பாம்புகள் படுத்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அச்சப்படுகிறார்கள். மேலும் குழந்தைகளை விளையாட வெளியே அனுப்பவே தயங்குகின்றனர். எனவே அங்கு புதர் செடிகளை வெட்டி அகற்றவும், பாம்புகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செல்வம், கோத்தகிரி.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

வடசித்தூர் பகுதிக்கு கிணத்துக்கடவு வழியாக குறைந்த எண்ணிக்கையில்தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் அந்த பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அவர்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவசுப்பிரமணியன், கொண்டம்பட்டி.

தெருவிளக்கு வசதி கிடைக்குமா?

அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க கூட வெளியே வர மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகுமார், பாதிரிமூலா.

மாசுபடும் தண்ணீர்

சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி, சுல்தான்பேட்டை, பச்சார்பாளையம், வடவேடம்பட்டி, ஜல்லிபட்டி, செஞ்சேரிமலை உள்ளிட்ட இடங்களில் பி.ஏ.பி. பிரதான கால்வாய் செல்கிறது. இங்கு சிலர் துணிகளை துவைப்பதுடன், வாகனங்களையும் கழுவுகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. இதன் காணமாக பொதுமக்கள் மட்டுமின்றி விலங்குகள் கூட குடிக்க முடியாத நிலைக்கு தண்ணீர் செல்லும் நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

பழனிசாமி, சுல்தான்பேட்டை.

முட்புதர்களால் விபத்து அதிகரிப்பு

பந்தலூர் தாலுகா மழவன்சேரம்பாடி அருகே கோட்டப்பாடி பகுதியில் சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. அங்கு வனவிலங்குகள் மற்றும் விஷ ஜந்துகள் அவ்வப்போது பதுங்கி கொள்கின்றன. இதை அறியாமல் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது தவிர முட்புதர்களின் கிளைகள் சாலை வரை நீண்டு உள்ளதால், விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த முட்புதர்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.

ஸ்ரீகாந்த், கோட்டப்பாடி.

தூர்வாரப்படாத நீரோடை 

கோத்தகிரி காம்பாய் கடையில் இருந்து கடைவீதி டோபிகானா வழியாக நீரோடை செல்கிறது. இந்த ஓடை நீரை நம்பி சலவை தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது ஓடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் நீரோட்டம் தடைப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த ஓடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஓடையை தூர வார பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வன், கோத்தகிரி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கருமத்தம்பட்டி அருகே ஊஞ்சப்பாளையம் சாலையோரத்தில் குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் அங்கு மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது. அவை காற்றில் பறந்து சாலை வரை சிதறி கிடக்கின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அவதி அடைகின்றனர். எனவே அங்கு குப்பை தொட்டி வைக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கடாசலம், சோமனூர்.

போக்குவரத்து நெரிசல்

கோவை மாநகரின் மத்திய பகுதியை ஒட்டி உள்ள சோமசுந்தரா மில் சாலை-மேம்பாலம் அருகில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இருவழிப்பாதையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ், காட்டூர்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் ஊத்துக்குளி பிரிவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், இதுேபான்று குடிநீர் வீணாவது தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும். எனவே அங்கு ஏற்பட்டு உள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேனாபதி, பொள்ளாச்சி.

நோய் பரவும் அபாயம்

கோவை அருகே கோணவாய்க்கால் பாளையம் கருப்புராயன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அங்கு கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகரிகள் முன்வர வேண்டும்.

பாலா, கோணவாய்க்கால்பாளையம்.


Next Story