ஆவடி அருகே குடோனில் பதுக்கிய ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஆவடி அருகே குடோனில் பதுக்கிய ரூ.2 கோடி செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து வனச்சரகத்தில் ஒப்படைத்தனர்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் காட்டூர் சிட்கோ பெண்கள் எஸ்டேட்டில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்து ஏற்றுமதி செய்து வருவதாக சென்னை நுண்ணறிவு மற்றும் புலனாய்வு உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சென்னை வனக்காவல் நிலைய வனச்சரகர் ராஜேஷ் மற்றும் வனத்துறை கண்காணிப்பு பிரிவு பணியாளர்கள் அடங்கிய தனி குழுவினர் நேற்று மதியம் காட்டூர் சிட்கோ பகுதிக்கு வந்து தொழிற்சாலைகள் அருகே இருக்கும் குடோனை சோதனையிட்டனர்.
அப்போது கம்பெனிகளுக்கு இடையில் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவருக்கு சொந்தமான குடோனை திறந்து பார்த்தனர். அந்த குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 6 அடி உயரமுள்ள 2 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை செங்குன்றம் பகுதியில் உள்ள வனச்சரகத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து பதுக்கி விற்பனை செய்த கும்பலை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story