தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவர்
தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தகராறு
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட களியனூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி- முகிலா தம்பதி. இவர்களது மகன்கள் லிங்கேஸ்வரன் (வயது 20), வேதபிரகாஷ் (18). லிங்கேஸ்வரன் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வேதபிரகாஷ் 9-ம் வகுப்பு வரை படித்த நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தகாத செயல்களில் ஈடுபட்டு, கொலை வழக்கிலும் சிக்கியதாக தெரிகிறது. வேதபிரகாஷ் அடிக்கடி குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தாய் முகிலாவிடம் வேதபிரகாஷ் தகராறு செய்துள்ளார். கல்லூரியில் இருந்து வந்த அண்ணன் லிங்கேஸ்வரன் இது குறித்து தம்பியிடம் தட்டி கேட்டார்.
இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் வேதபிரகாஷ் தனது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
வெட்டிக்கொலை
இதனால் பயந்து போன லிங்கேஸ்வரன் கோபம் அடைந்து, மதுபோதையில் வீட்டில் படுத்திருந்த தனது தம்பியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வேதபிரகாஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.இது குறித்து அங்கு இருந்தவர்கள் வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேதபிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் லிங்கேஸ்வரனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story