தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி


தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 March 2022 8:38 PM IST (Updated: 6 March 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி இ-மெயில் அனுப்பி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை

வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி இ-மெயில் அனுப்பி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

லண்டனில் வேலை

கோவை பீளமேடு துரைசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 41), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மெயிலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் அதிகாரி பணியிடம் காலியாக உள்ளதாக தகவல் வந்தது.  உடனே அந்த லிங்கை விவேகானந்தன் கிளிக் செய்து  தனது சுய விவரங்களை பதிவிட்டார்.

இதையடுத்து அவரது மெயிலுக்கு லண்டனில் வேலை தயாராக உள்ளதாகவும், விமானம், இருப்பிடம் உள்ளிட்டவற்றுக்கு பணம் அனுப்பும்படி தகவல் வந்தது. அதை நம்பிய அவர், ஆன்லைன் மூலமாக பல்வேறு கட்டங்களாக ரூ.15 லட்சத்து 8 ஆயிரத்து 950 அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை அணுகி லண்டன் செல்ல விசா பெற்றுக்கொள்ளும்படி அவருக்கு மெயில் வந்தது. அதன்படி அவர் சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு சென்று விசாரித்தார். அவரிடம், லண்டனில் அப்படி ஒரு நிறுவனம் இல்லை. இதுபோன்று மெயிலில் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அரியானா வங்கியில் பணம்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  போலீசார் விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வங்கி கணக்கிற்கு விவேகானந்தன் பணம் அனுப்பி ஏமாந்தது தெரிய வந்தது. எனவே இதில் தொடர்பு உடைய வர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, மெயில் மற்றும் செல்போன் எண்களுக்கு வரும் தகவல்களை நம்பி யாருடைய வங்கி அல்லது மின்னணு பரிமாற்றம் மூலம் பணம் அனுப்ப வேண்டாம். வெளிநாடு களில் வேலை என்றால் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகி உறுதி செய்து அவசியம். செல்போனில் யாரிடமும் வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்றார்.

Next Story