லாரி மீது கார் மோதி விபத்து- 2 குழந்தைகள் பரிதாப சாவு


லாரி மீது கார் மோதி விபத்து- 2 குழந்தைகள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 6 March 2022 8:38 PM IST (Updated: 6 March 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.

மலுமிச்சம்பட்டி

கோவை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். அவர்களது பெற்றோர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கேரளாவுக்கு சென்றனர்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). பெயிண்டர். இவர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். ராமச்சந்திரனின் நண்பர் அதேபகுதியைச் சேர்ந்தவர் நிசார் அலி (35).

இந்த நிலையில் ராமச்சந்திரன் குடும்பத்தோடு தனது சொந்த ஊரான கோழிக்கோட்டில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து நிசார்அலிக்கு சொந்தமான காரில், ராமச்சந்திரன் அவருடைய மனைவி சாரிகா (55) மற்றும் 

பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரவிச்சந்திரனின் மனைவி காஞ்சனா குமாரி (50), அவருடைய மகன் மோனிஷ்குமார் (30) டிரைவர், மகள்கள் ரஞ்சிதா (18), அக்சயா (19), மற்றும் மோனிஷ்குமாரின் மனைவி இந்துமதி (26), இவர்களின் குழந்தைகள் சஞ்சு ஸ்ரீ (7), மித்ரன் (5) மற்றும் நிசார் அலி என 10 பேர் கேரளாவுக்கு சென்றனர்.

லாரி மீது கார் மோதல்

பின்னர் அங்குள்ள கோவில் மற்றும் தர்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு ஈரோட்டிற்கு திரும்பினர். காரை மோனிஷ்குமார் ஓட்டினார். கார் நேற்று அதிகாலை பாலக்காடு-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது.

இதற்கிடையில் க.க.சாவடி அருகே பாரம் ஏற்றி சென்ற லாரி ஒன்று டீசல் இல்லாமல் சாலையில் நின்று கொண்டிருந்தது. மேலும் லாரியின் டிரைவர் டீசல் வாங்க சென்றுவிட்டார். இந்த நிலையில் மோனிஷ்குமார் ஓட்டிவந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.

அக்கா-தம்பி பலி

இதில் காரின் முன் பகுதி அப்பளம்போல நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அபாய குரல் எழுப்பினர். அதிகாலை நேரம் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக தான் இருந்தது. 

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

பின்னர் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன், சரிகா, காஞ்சனாகுமாரி, ரஞ்சிதா, அக்சயா, மோனிஷ்குமார், இந்துமதி, சஞ்சு ஸ்ரீ, மித்ரன் ஆகிய 9 பேரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் சிறுமி சஞ்சு, சிறுவன் மித்ரன் ஆகியோர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து படுகாயம் மற்ற 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் நிசார் அலி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் லாரியை சாலையில் நிறுத்தி வைத்ததாக லாரி டிரைவர் ஆலாந்துறையை சேர்ந்்த சின்னசாமி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பெற்றோரின் கண்முன்னே அக்கா-தம்பி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story