கள்ளக்காதல் விவகாரத்தில் தச்சு தொழிலாளி குத்திக்கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
கோவை
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி போலீசில் சரண் அடைந்தார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 55) தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர். அதில் ராஜ்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்தநிலையில் நாராயணசாமிக்கும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது ராஜேஸ்வரிக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் குடும்ப தகராறு இருந்து வந்தது. மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு கணவரிடம் மனைவி ராஜேஸ்வரி கூறி உள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
கத்தியால் குத்திக்கொலை
இந்தநிலையில் இதுதொடர்பாக நேற்று மாலை 3 மணி அளவில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வரி தனது கணவரை கத்தியால் குத்தினார்.
அதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து நாராயணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து ராஜேஸ்வரி நேராக சிங்காநல்லூர் போலீஸ்நிலையம் சென்று கணவரை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.
பரபரப்பு
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸ் சரக உதவி கமிஷனர் அருண் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருண் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பிணமாக கிடந்த நாராயணசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவத்தில் மகன் ராஜ்குமாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






