மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது.
கடல் சீற்றம்
யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது மாமல்லபுரம். இங்குவரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் கடற்கரை மணல் வெளிபரப்பில் பொழுதை போக்குவர். அவ்வப்போது கடலில் குளித்து மகிழ்வர். இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. நேற்று காலை கடல் அலைகள் எப்போதும் இல்லாத வகையில் 10 அடி உயரத்துக்கு சீறி எழும்பின.
கடல் நீர் கரைப்பகுதியை நோக்கி 50 அடி தூரத்துக்கு சீறி வந்ததால் கரைப்பகுதியில் சில இடங்களில் கடல் நீர் குளம்போல் தேங்கி நின்றதை காண முடிந்தது. கடல் சீற்றம் காரணமாக கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் ராட்சத அலையால் கடலில் அடித்து செல்லப்படும் சூழல் நிலவியது. உடனடியாக படகுகள் கடலில் அடித்து செல்லாமல் இருக்க அவற்றை இழுவை டிராக்டர் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தூண்டில் வளைவு
கடல் சீற்றத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் தமிழக அரசு கரைப்பகுதியில் தூண்டில் வளைவுகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும்.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தாங்கள் எந்த திசையில் இருக்கிறோம் என்பதை அறியும் ஜி.பி.எஸ். கருவிகளையும் தமிழக அரசு மாமல்லபுரம் மீனவர்களுக்கு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று மாமல்லபுரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story