தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி செய்தி எதிரொலி:
கட்டுமான பொருட்கள் அகற்றம்
கோத்தகிரி அருகே தப்பக்கம்பை - கொணவக்கரை சாலையில் நெடுஞ்சாலை துறை பணிக்காக கட்டுமானப் பொருட்கள் போக்கு வரத்துக்கு இடையூறாக சாலையில் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் இருந்த கட்டுமான பொருட்களை அகற்றி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
கிருஷ்ணன், தப்பக்கம்பை.
போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு மகாலிங்கம்புரம் நுழைவு வாயில் பகுதியில் எப்போதும் போக்கு வரத்து மிகுந்து காணப்படும். இதன் காரணமாக அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் அங்கு போக்கு வரத்தை சீரமைக்க நிரந்தரமாக போலீசார் இருப்பது இல்லை. எப்போதாவது மட்டுமே நிற்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி யடைந்து வருகிறார்கள். எனவே இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபுராஜேந்திரன், பொள்ளாச்சி.
நீரோடை ஆக்கிரமிப்பு
குன்னூர் ராஜாஜி நகர் அருகே நீரோடை செல்கிறது. இந்த நீரோடை புதர்மண்டி கிடப்பதுடன் கழிவுகளும் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீரோடையை ஆக்கிரமித்து உள்ள புதர் மற்றும் கழிவுகளை அகற்ற வேண்டும்.
ரசூல், ராஜாஜி நகர்.
மாணவர்களின் அலட்சியம்
கோவை மேட்டுப்பாளையம் சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு அதில் கம்பிகள் போடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்த சாலையில் எருகம்பெனி பஸ்நிறுத்தம் அருகே தடுப்புச்சுவரில் உள்ள உடைந்த கம்பியில் பள்ளி மாணவர்கள் அமர்ந்து ஊஞ்சல் போன்று ஆடுகிறார்கள். இதனால் தவறி விழுந்தால் விபத்துதான் ஏற்படும். எனவே அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்று உடைந்த நிலையில் இருக்கும் கம்பிகளை அகற்றுவதுடன், அலட்சியமாக செயல்படும் மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
செல்லதுரை, கோவை.
குப்பைகளுக்கு தீ வைப்பு
மேட்டுப்பாளயைம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த குப்பைகளில் சிலர் தீ வைப்பதால் அவை கொழுந்து விட்டு எரிவதுடன் புகை மூட்டத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித்குமார், மேட்டுப்பாளையம்.
குப்பை தொட்டி மாயம்
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு 3-வது வீதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே பொதுமக்கள் குப்பைகளை போட குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தொட்டி திடீரென்று மாயமாகிவிட்டதால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அங்கு குப்பைகள் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
முரளிதரன், ராமநாதபுரம்.
பஸ் வசதி வேண்டும்
சூலூர் தாலுகாவை சேர்ந்த பதுவம்பள்ளியில் இருந்து சூலூருக்கு சென்றுவர போதிய பஸ்வசதி இல்லை. இதனால் சோமனூர் சென்று பின்னர் அங்கிருந்து சூலூர் செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சூலூரில் இருந்து பதுவம்பள்ளி வழியாக அன்னூருக்கு பஸ் இயக்கினால் பயனாக இருக்கும். அதை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
சசி, பதுவம்பள்ளி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட செந்தில்நகர் வினாயகர் கோவில் வீதியில் சாக்கடை சரிவர சுத்தம் செய்யப்படுவது இல்லை. அத்துடன் அதன் அருகே குப்பைகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடையை சுத்தம் செய்வதுடன் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
வெங்கடாசலம், சோமனூர்.