நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்
நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா தொடங்கியது.
நத்தம்:
நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை 7 மணி அளவில் மேளதாளம் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் முன்புள்ள கொடி மரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், கோவில் செயல் அலுவலர் வாணிமகேஸ்வரி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், கோவில் பூசாரிகள், விழாக்குழுவினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்து சந்தன கருப்புசுவாமி கோவிலில் வருவார்கள். அங்கிருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்து, மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள்.
இதையடுத்து திருவிழா தொடங்கி, ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story