கோயம்பேட்டில் தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை


கோயம்பேட்டில் தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2022 3:18 PM IST (Updated: 8 March 2022 3:18 PM IST)
t-max-icont-min-icon

தங்களை அருகில் இருந்து கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் தந்தை-மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோயம்பேட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தை-மகன்

சென்னை கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 77). இவருடைய மகன் ஞானம் (53). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கங்காதரனின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தந்தை-மகன் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

கங்காதரன் வயது முதிர்வு காரணமாகவும், ஞானம் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாகவும் அவதிப்பட்டு வந்தனர். கங்காதரனின் மகள் சாமந்தி (45), அதே பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்தான் தந்தை-அண்ணன் இருவருக்கும் உணவு கொடுத்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

ஆனாலும் கங்காதரனும், அவருடைய மகன் ஞானமும் இந்த நேரத்தில் தங்களை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லையே என மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த கங்காதரன், அவருடைய மகன் ஞானம் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று காலை வழக்கம்போல் தந்தை-அண்ணன் இருவருக்கும் சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு வந்த சாமந்தி, இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உருக்கமான கடிதம்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், தூக்கில் தொங்கிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, தற்கொலைக்கு முன்னதாக ஞானம் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில் அவர், “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் இருவரின் உடல்நிலையும் நாளுக்கு நாள் அதிகமாக பாதித்து வருகிறது. எங்களை அருகில் இருந்து கவனித்து கொள்ள யாரும் இல்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story