2 மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல் குழந்தை உள்பட 4 பேர் பலி
2 மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல் குழந்தை உள்பட 4 பேர் பலி
பொங்கலூர் அருகே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வேன் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
2 குடும்பத்தை சேர்ந்தவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் இடையப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் குமரேசன்வயது 30 இவரது மனைவி ஆனந்தி 25. இவர்கள் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அதுபோல் நெல்லை மாவட்டம் பாப்பாங்குளத்தை சேர்ந்த முருகன்என்கின்ற பிரம்மநாயகம் 45. இவரது மனைவி முத்துமாரி40. இவர்களது பெண் குழந்தை மகாகவி 4. பிரம்மநாயகம் பல்லடம் வடுகபாளையத்தில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை 5 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம்-தாராபுரம் சாலையில் தாராபுரம் நோக்கி புத்தெரிச்சல் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே தாராபுரம் பகுதியில் இருந்து பல்லடம் நோக்கி காய்கறி ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேன் எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் காய்கறி ஏற்றி வந்த சரக்கு வேனும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
4 பேர் பலி
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அருகில் இருந்தவர்களும், காமாநாயகன்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது குமரேசன், முருகன் என்கின்ற பிரம்மநாயகம், அவருடைய மனைவி முத்துமாரி, இவர்களது குழந்தை மகாகவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. குமரேசனின் மனைவி ஆனந்தி மட்டும் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் உயிரிழந்த குமரேசன், முருகன் என்கின்ற பிரம்மநாயகம், முத்துமாரி, மகாகவி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள். சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். விபத்தை ஏற்படுத்தியதும் அவர் வேனில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இரண்டு மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோதக்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story