சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரிடம் 2 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் டெல்லி தொழில் அதிபரிடம் 2 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லி தொழில் அதிபர்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது டெல்லியை சேர்ந்த சுனில் சொல்லாகி (வயது 39) என்ற தொழில் அதிபரின் கைப்பையை ‘ஸ்கேன்’ மூலம் பரிசோதித்தபோது அதில் குண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த கைப்பையை தனியாக எடுத்து வைத்துவிட்டு தொழில் அதிபரிடம் விசாரித்தனர். அந்த கைப்பையில் எதுவும் இல்லை என்று சுனில் சொல்லாகி கூறினார். எனினும் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பையை திறந்து பார்த்தனர்.
துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்
அதில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனா். அவை கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் 7.55 எம்.எம். ரக குண்டுகள் ஆகும். துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொழில் அதிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், “டெல்லியில் இருந்து 4-ந் தேதி திருப்பதிக்கு சென்றேன். அங்கிருந்து சென்னை வந்து தற்போது ஜெய்ப்பூர் செல்வதற்காக வந்துள்ளேன். என்னிடம் துப்பாக்கி உரிமம் மற்றும் ஆவணங்கள் உள்ளன. எனது பாதுகாவலர் கைப்பையை அவசரமாக எடுத்து வந்ததால் தவறுதலாக அதில் துப்பாக்கி குண்டுகள் வந்துவிட்டது” என்றார்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து தொழில் அதிபர் சுனில் சொல்லாகி மற்றும் அவரிடம் பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகளை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணகுமாரிடம் 15 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story