பாலியல் தொடர்பான குற்றங்கள் குறித்து போலீசில் தைரியமாக புகார் கொடுக்கலாம்


பாலியல் தொடர்பான குற்றங்கள் குறித்து போலீசில் தைரியமாக புகார் கொடுக்கலாம்
x
தினத்தந்தி 8 March 2022 10:14 PM IST (Updated: 8 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொடர்பான குற்றங்கள் குறித்து போலீசில் தைரியமாக புகார் கொடுக்கலாம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி

பாலியல் தொடர்பான குற்றங்கள் குறித்து போலீசில் தைரியமாக புகார் கொடுக்கலாம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

படிப்பில் கவனம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி பருவத்தில் படிப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது வாழ்க்கையில் முன்னேற முடியும். பள்ளி பருவத்தில் வருவது காதல் அல்ல. அது ஒருவித ஈர்ப்பு தான் என்பதை மாணவ-மாணவிகள் உணர வேண்டும். 

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வி மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். குழந்தை திருமணத்தால் பெண்களின் வாழ்க்கை கேள்விகுறியாகி விடும். 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

தைரியமாக புகார் கொடுக்கலாம்

பெற்றோர் குழந்தைகளிடம் பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து தெரியப்படுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் நண்பர்களாக பழகினால் தான் எதற்கு பயப்படாமல் கூறுவார்கள். பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் பள்ளியில் என்ன நடந்தது என்பதை பெற்றோரிடம் குழந்தைகள் தெரிவிக்க வேண்டும். 

சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக கூடாது.

 போக்சோ சட்டம் சிறுமிகள் பாதுகாப்பிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்டம் குறித்து மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். பாலியல் தொல்லை கொடுத்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, உதவி ஆசிரியை ராஜேஸ்வரி, மகளிர் போலீஸ் நிலைய குழந்தைகள் நல அலுவலர் சுனிதா, வக்கீல் கீதா, டாக்டர் ஷோபனா, பெண்கள் உரிமைக்களுக்கான உலக பேரவை தலைவி சித்ரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story