பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்டம்


பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்டம்
x
தினத்தந்தி 8 March 2022 10:14 PM IST (Updated: 8 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். 

இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 22-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. இதை தொடர்ந்து பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

 5-ந் தேதி காலை 10 மணிக்கு கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. 7-ந் தேதி இரவு அபிஷேகம் நடைபெற்றது. 8-ந் தேதி காலை 6 மணிக்கு மா விளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இரவு 7 மணிக்கு நடக்கிறது. தேர்திருவிழாவையொட்டி வெள்ளித்தேர், விநாயகர் தேரை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

மேலும் 3 நாட்கள் தொடர்ந்து வெள்ளித்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நாட்களில் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாள் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு, வெங்கட்ரமணன் வீதி, இமான்கான் வீதி சந்திப்பை அடைகிறது.

 2-ம் நாள் தேரோட்டம் 9-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. 10-ந் தேதி இரவு 7 மணிக்கு 3-ம் நாள் தேரோட்டம் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது.

 12-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 14-ந்தேதி இரவு 8 மணிக்கு மகாஅபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

Next Story