ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் இருந்து கோவை திரும்பிய மாணவர்கள்
போர் பதற்றம் காரணமாக ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா மாகாணத்தில் இருந்து கோவைக்கு மாணவர்கள் திரும்பினர். அவர்களை பூங்கொத்து கொடுத்து பெற்றோர் வரவேற்றனர்.
கோவை
போர் பதற்றம் காரணமாக ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா மாகாணத்தில் இருந்து கோவைக்கு மாணவர்கள் திரும்பினர். அவர்களை பூங்கொத்து கொடுத்து பெற்றோர் வரவேற்றனர்.
போர் பதற்றம்
உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. அதன்படி உக்ரைன் நாட்டில் இருந்து இந்திய மாணவர்கள் பல்வேறு கட்டங்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போர் பதற்றம் காரணமாக ரஷியாவில் உள்ள இந்திய மாணவர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இன்று காலை 11.30 மணிக்கு ரஷியாவில் இருந்து துடியலூரை சேர்ந்த டீனா ஜெனிபர் மற்றும் திருப்பூரை சேர்ந்த புவனேஷ் கார்த்திக் ஆகிய 2 மருத்துவ மாணவர்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
எல்லைப்பகுதி
இதையடுத்து ரஷியாவில் இருந்து வந்த மாணவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஷியாவில் உள்ள கிரீமியா மாகாணத்தில் மருத்துவம் படித்து வந்தோம். இந்த மாகாணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனிடம் இருந்து ரஷியாவால் ஓட்டெடுப்பு நடத்தி கைப்பற்றப்பட்ட பகுதி ஆகும். ரஷியா-உக்ரைன் எல்லைப்பகுதி என்பதால் அங்கும் போர் பதற்றம் நிலவியது.
எங்களுடன், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். நாங்கள் விரும்பினால், விடுமுறை எடுத்து, சொந்த நாடு திரும்பலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் அங்கு படித்த வெளிநாடுகளை சேர்ந்த 70 சதவீத மாணவர்கள் சொந்த நாடு திரும்பிவிட்டனர்.
துபாய் வழியாக...
விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், கிரீமியா மாகாணத்தில் இருந்து மாஸ்கோ வரை ரெயிலில் பயணித்தோம். அங்கிருந்து துபாய் வழியாக சென்னை வந்து கோவைக்கு திரும்பினோம். ரஷியாவில் மருத்துவ படிப்புக்கு ரூ.35 லட்சம் வரை செலவாகும். ஆனால் இந்தியாவில் ஒரு ஆண்டுக்கே ரூ.25 லட்சம் வரை செலவாகிறது. இதனால்தான் அங்கு படிக்க சென்றோம். தற்போது ஆன்லைன் மூலமாக எங்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் நம்பிக்கையுடன் சொந்த ஊருக்கு திரும்பினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story