ஆன்லைன் மூலம் ரூ.5 லட்சம் மோசடி


ஆன்லைன் மூலம் ரூ.5 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 9 March 2022 8:04 PM IST (Updated: 9 March 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஐ.டி. ஊழியர் உள்பட 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.5 லட்சம் மோசடி நடைபெற்று உள்ளது.

கோவை

கோவையில் ஐ.டி. ஊழியர் உள்பட 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.5 லட்சம் மோசடி நடைபெற்று உள்ளது.

ஐ.டி. ஊழியர்

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் அந்தோணி ராஜேஷ். ஐ.டி. நிறுவன ஊழியர். இவரது செல்போன் எண்ணுக்கு வங்கி கணக்கு முடக்கப்படாமல் இருக்க பான் கார்டு விவரத்தை அப்டேட் செய்யும்படி குறுஞ்செய்தியில் ஒரு இணையதள முகவரி(‘லிங்க்’) வந்தது. அதில் சென்று அந்தோணி ராஜேஷ் தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டார். 

பின்னர் ரகசிய குறியீட்டு எண்ணை பகிர்ந்தவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2¼ லட்சம் பறிபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணி ராஜேஷ், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலி ஏ.டி.எம். கார்டு

இதேபோன்று கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 71). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியூ சித்தாபுதூரில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தன்னை கணபதி கிளை வங்கி ஊழியர் என்று அவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும் பணம் எடுக்க உதவி செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து சுப்பையா அவரிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து ரகசிய எண்ணை தெரிவித்தார். 

தொடர்ந்து அந்த நபர் சுப்பையா எடுக்கக்கூறிய தொகையை எடுத்து கொடுத்துவிட்டு ஏ.டி.எம். கார்டை ஒப்படைத்து சென்றார். பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் சுப்பையா பணம் எடுக்க சென்றபோது ஏ.டி.எம் கார்டு செயல்படவில்லை. இதனையடுத்து வங்கி நிர்வாகத்தை அணுகியபோது அவரது கணக்கில் இருந்து மர்ம நபர் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 770 எடுத்து மோசடி செய்துள்ளது ெதரியவந்தது. அதாவது அந்த நபர், ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை பெற்ற பிறகு பணம் எடுத்து கொடுத்துவிட்டு போலி ஏ.டி.எம் கார்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுப்பையா மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த மோசடி நபரை தேடி வருகின்றனர்.

கிரெடிட் கார்டு

கோவை காட்டூர் ராம்நகரை சேர்ந்தவர் சம்பத்குமார்(29). இவரது செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பில் பேசிய நபர், வங்கி ஊழியர் என்று கூறிக்கொண்டு உங்களுக்கு கிரெடிட் கார்டு தொகையை அதிகப்படுத்தி தருவதாகவும், அதற்கு உங்களது செல்போன் எண்ணுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை கூறும்படியும் கேட்டார். உடனே சம்பத்குமார், ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்தவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் பறிபோனது. இது குறித்து சம்பத்குமார், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோவை மாநகரில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் 8 வழக்குகள் பதிவாகியுள்ளது.


Next Story