கோவை மாநகராட்சி நிதிச்சுமை ரூ.2,480 கோடியாக உயர்வு


கோவை மாநகராட்சி நிதிச்சுமை ரூ.2,480 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 9 March 2022 8:04 PM IST (Updated: 9 March 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி ரூ.2 ஆயிரத்து 480 கோடி நிதிச்சுமையால், திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. இதனால் பட்ஜெட்டில் வரி உயர்வு வருமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

கோவை

கோவை மாநகராட்சி ரூ.2 ஆயிரத்து 480 கோடி நிதிச்சுமையால், திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. இதனால் பட்ஜெட்டில் வரி உயர்வு வருமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ரூ.2,480 கோடி நிதிச்சுமை

கோவை மாநகராட்சியில் குளங்கள் சீரமைப்பு பணிகள், பூங்கா பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தாலும், நிதிச்சுமையால் இவற்றை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் நிதி வருவாய் அதிகமாக இருந்த நிலையில், ரூ.200 கோடி வரை வங்கிகளில் வைப்புநிதியாக வைக்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த நிலை மாறி, ரூ.2 ஆயிரத்து 480 கோடியே 60 லட்சம் நிதிச்சுமையால் அவதிப்படுகிறது.

குறிப்பாக கடன் பெற்ற நிதி ரூ.227.79 கோடி ஆகும். இதில் வட்டியாக மட்டும் செலுத்தப்பட வேண்டிய தொகை ரூ.195.76 கோடி. பெரிய திட்டங்களுக்கான செலவு ரூ.311.92 கோடி. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை ரூ.251.31 கோடி. மாநகராட்சி ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.12.19 கோடி. சமீபத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை ரூ.12.99 கோடி. குடிநீர் திட்ட பாக்கி ரூ.277 கோடி.

குடிநீர் திட்டங்கள்

இந்த நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையும் அதிகரித்து வருகிறது. சிறுவாணி, ஆழியார், பில்லூர்-1, கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் வினியோகத்துக்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை மட்டும் ரூ.277.08 கோடி.

இது தவிர குறிச்சி-குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு ரூ.598.44 கோடி செலவிட வேண்டி உள்ளது.

சொத்து வரி

கோவை மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில்வரி, மாநகராட்சி கடைகளின் மாதாந்திர வாடகை, ஆண்டு குத்தகை, மத்திய மற்றும் மாநில அரசு மானியங்கள் மூலம் வருவாய் வருகிறது. இதில் சொத்து வரியை உயர்த்துவது உள்ளிட்டவற்றின் முடிவை அரசு மட்டுமே மேற்கொள்ள முடியும். மாநகராட்சியால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரி பாக்கி, வணிக கட்டிடங்களின் வாடகை பாக்கி உள்ளிட்டவற்றை வசூலிப்பதன் மூலம் மட்டுமே நிதிச்சுமையை ஓரளவு சரிகட்ட முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பட்ஜெட்

இதற்கிடையில் பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகளை மாநகராட்சி நிதிப்பிரிவு அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். நிதிச்சுமையை சமாளிக்க வரியினங்கள் உயர்த்தப்படுமா? என்பன உள்ளிட்ட விவரங்கள் மாநகராட்சி பட்ஜெட்டில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story