காஞ்சீபுரம் புற்று நோய் ஆஸ்பத்திரிக்குள் மருத்துவ கழிவுகளை எரிப்பதால் நோயாளிகள் பாதிப்பு


காஞ்சீபுரம் புற்று நோய் ஆஸ்பத்திரிக்குள் மருத்துவ கழிவுகளை எரிப்பதால் நோயாளிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 9 March 2022 8:11 PM IST (Updated: 9 March 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் புற்று நோய் ஆஸ்பத்திரிக்குள் மருத்துவ கழிவுகளை எரிப்பதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரைபேட்டை பகுதியில் புற்றுநோய் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஆஸ்பத்திரி வளாகத்தின், பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் முள்செடிகள், புற்கள் ஏராளமாக முளைத்துள்ளன. அங்கேயே மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. வாரத்திற்கு இருமுறை புற்றுநோய் ஆஸ்பத்திரியில் தேங்கியுள்ள மருத்துவ கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் மற்றும் புற்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள், தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர்.

இதில், ஆபத்தான மருத்துவ கழிவுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், ஊசிகள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பிளாஸ்டிக் குப்பைகளையும் எரிக்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரியை சுற்றி பெரும் புகை மூட்டம் எழுகிறது.

ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் புகை மூட்டத்தில் மூச்சு விட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நோயாளிகள் மட்டுமில்லாமல் அவர்களை பார்க்க வரும், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் புகையால் சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிக அளவு சேரும் மருத்துவ கழிவுகளை வருடக்கணக்கில் மலைபோல் குவித்து வைப்பதால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் மருத்துவ கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் ஆஸ்பத்திரி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் புகை சுற்றுவட்டாரத்தில் காரப்பேட்டை, சின்னகரை செட்டியார் பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலுள்ள குடியிருப்புகளையும் கடுமையாக பாதிப்படைய வைக்கிறது. இதனால் சுற்றியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகளை அகற்றவும் ஆஸ்பத்திரி வளாகத்தில் கழிவுகளை தீ வைத்து கொளுத்துவதை தடுக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புற்றுநோய் ஆஸ்பத்திரியின் இணை இயக்குனர் மனோகரன் கூறியதாவது:-

மருத்துவ கழிவுகள் குப்பைகளுடன் சேர்ந்து இருக்கிறது என்றால் நிச்சயம் தவறு தான் மேலும் எந்த குப்பையும் இருக்க கூடாது. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் ஆஸ்பத்திரி அமைந்திருப்பது ஊராட்சி பகுதி என்பதால் ஊராட்சியில் இருந்து குப்பைகளை சேகரித்து கொண்டு செல்ல வசதி இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியில் இருந்து லாரிகள் மூலம் குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியை தொடர்புகொண்டு கேட்கும்போது:-

புற்றுநோய் ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப் படுகின்றனவா என்பது தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் மேலும் மருத்துவ கழிவுகள் அல்லாத இதர கழிவுகளை முறையாக ஆஸ்பத்திரியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story