காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சீபுரம்,
பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நேற்று அதிகாலை மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியை ஏற்றினார்கள். இதனை தொடர்ந்து ஏலவார்குழலி அம்மனுக்கும் ஏகாம்பரநாதர சாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
கொடியேற்ற விழாவில் காஞ்சீபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், ஆ.குமரன், வெங்கடேசன், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு தினந்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் சாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் மலர் அலங்காரங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
வருகிற 13-ந்தேதி காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. 14-ந்தேதி மகா ரதம் எனப்படும் தேரோட்டம் நடைபெறுகிறது. 17-ந்தேதி அதிகாலையில் திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. இந்த மாதம் 21-ந்தேதி 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story