கொரோனாவுக்கு பிறகு மராட்டியத்தில் 7 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடல் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 March 2022 9:53 PM IST (Updated: 11 March 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனாவுக்கு பிறகு 7 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

மும்பை, 
மராட்டியத்தில் கொரோனாவுக்கு பிறகு 7 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக 30 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர்.
7 லட்சம் நிறுவனங்கள் மூடல்
மராட்டியத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கொரோனாவுக்கு பிறகு அதிகளவில் மூடப்பட்டுள்ளது சமீபத்தில் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வில் தெரியவந்து உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலத்தில் 17.67 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 91 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர். 
இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி மாநிலத்தில் 10.3 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதாவது கொரோனாவால் மாநிலத்தில் சுமார் 7 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக 30 லட்சம் பேர் வேைல வாய்ப்பை இழந்து உள்ளனர்.
மோசமான உள்கட்டமைப்பு வசதி
இதுகுறித்து மாநில தொழில் மேம்பாட்டு கழக (எம்.ஐ.டி.சி.) சங்க தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன் கூறுகையில், "சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெரிய நிறுவனங்களுக்காக செயல்படுகின்றன. 2021-ம் ஆண்டு மத்தியில் இந்த நிறுவனங்கள் எழுச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மோசமான நிலையில் உள்ள உள்கட்டமைப்புடன் தினந்தோறும் போராட வேண்டிய நிலை உள்ளது. எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களை உரிய நேரத்தில் முடித்து கொடுக்க முடியவில்லை.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு கொரோனாவை மட்டும் காரணமாக கூற முடியாது. சாலைகள் இல்லாதது, தெருவிளக்கு பிரச்சினை, தடையில்லா மின்சாரம் இல்லாமை, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க பிரச்சினை, திருட்டு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. எங்கள் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200-ல் இருந்து 1,250 ஆக குறைந்து உள்ளது" என்றார்.

Next Story