அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை சில மணி நேரத்தில் மீட்பு தம்பதி கைது


அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை சில மணி நேரத்தில் மீட்பு தம்பதி கைது
x
தினத்தந்தி 12 March 2022 5:24 AM IST (Updated: 12 March 2022 5:24 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை சில மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பவழந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 29). இவருடைய மனைவி சுஜாதா(25). இவர்களுக்கு கடந்த 8-ந் தேதி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று சுஜாதாவை அவரது மாமியார் கழிவறைக்கு அழைத்துச்சென்றார். திரும்பி வந்து பார்த்த போது குழந்தை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, இப்போதுதான் குழந்தையுடன் ஒரு தம்பதியை காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வருகிறேன் என்று கூறினார்.

தம்பதி கைது

உடனடியாக அதே ஆட்டோவில் சிவகாஞ்சீபுரம் போலீசாரின் உதவியுடன் காஞ்சீபுரம் பஸ் நிலையத்துக்கு சென்ற உறவினர்கள், குழந்தையுடன் நின்று கொண்டிருந்த தம்பதியை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்த பச்சிளம் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரம் மாவட்டம் பிச்சிவாக்கம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமன் (30), அவரது மனைவி சத்யபிரியா (23) என்பதும், திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், குழந்தையை கடத்தியதும் தெரிந்தது. கணவன்-மனைவி இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story