வாலாஜாபாத் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்; கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
வாலாஜாபாத் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னேரி, அகரம், மஞ்சமேடு, கட்டவாக்கம், தொள்ளாழி, திருவங்கரணை, அயிமிஞ்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நெல் பயிர் பயிரிடப்பட்டு அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் வழக்கம் போல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு உத்தரவிடக்கோரி வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னேரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
மஞ்சமேடு, கட்டவாக்கம் பகுதியில் அறுவடை செய்ய நெற்பயிர் தயார் நிலையில் உள்ள காரணத்தால் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலம் அருள் தலைமையில் கிராம விவசாயிகள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் நெல் பயிரிட்ட விவசாயிகள் அறுவடை செய்ய தயாராகி வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story