சலூன் கடைக்காரர் குத்திக்கொலை
கோவையில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சலூன் கடைக்காரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இந்து முன்னணி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோவையில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சலூன் கடைக்காரர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இந்து முன்னணி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சலூன் கடைக்காரர்
கோவை செல்வபுரம் அருகே தெலுங்குபாளையம் புதூர் அம்மன் நகரை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 35). அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சசிகுமாருக்கும், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அஞ்சலி, 7 மாத கர்ப்பிணியாக உள்ளதால், பிரசவத்துக்காக அவரது பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கிறார்.
பண தகராறு
இதற்கிடையில் சசிகுமாருக்கு, தனது நண்பரான சொக்கம்புதூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராமன் என்ற ராம்ஜி(47) மூலம் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ(52) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவரிடம், எவ்வித ஆவணங்களும் வழங்காமல் வாய்மொழியாக ரூ.5 லட்சம் கடனாக ராம்ஜி முன்னிலையில் சசிகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பல நாட்கள் ஆகியும் கடனை திரும்ப கொடுக்கவில்லை. மேலும் அந்த பணத்தை வட்டிக்கு விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சசிகுமாருக்கும், ராம்ஜி-இளங்கோ ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
சுவர் ஏறி குதித்தனர்
இந்த நிலையில் நேற்று இரவில் சசிகுமார் தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டு சுற்றுச்சுவரை ஏறி குதித்து ராம்ஜி, இளங்கோ ஆகியோர் உள்ளே நுழைந்தனர்.
பின்னர் கதவை தட்டினர். உடனே தூக்கத்தில் இருந்து விழித்த சசிக்குமார் கதவை திறந்து வெளியே வந்தார்.அங்கு ராம்ஜி, இளங்கோ ஆகியோர் நிற்பதை பார்த்ததும், ‘இந்த நேரத்தில் ஏன் இங்கு வந்துள்ளீர்கள்?, எதுவாக இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம்?’ என்றுக்கூறினார். மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு 2 மணியளவில் அவர்களை வீட்டின் முன்பு உள்ள சாலை வரை அழைத்து சென்று விட்டார்.
குத்திக்கொலை
அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராம்ஜி, இளங்கோ ஆகியோர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சசிகுமாரின் கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் செல்வபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு 2.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் கொல்லப்பட்ட சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சசிகுமார் கொல்லப்படும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் ராம்ஜி மற்றும் இளங்கோ ஆகியோரை அவர்களது வீடுகளில் வைத்தே போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கைப்பற்றினர்.
Related Tags :
Next Story