இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்


இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 March 2022 8:19 PM IST (Updated: 14 March 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர்.

கோவை

இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர். 

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதில் வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை கொடுத்து இருந்தனர். 

அதன்படி கோவை மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவையில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. தற்போது இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நடைமுறை அமலுக்கு வந்து உள்ளது. இதனால் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் நிகழ்ந்தால் காப்பீடு தொகை பெற முடியாது.

கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் முறை அதிகளவில் உள்ளது. எனவே முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் அந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. 

இதேபோன்று இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள்  நூதன முறையில் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் காதில் பூ சுற்றிக்கொண்டும், மனுக்களை கழுத்தில் மாலையாக அணிந்துக்கொண்டும் இருந்தனர்.

மனுக்கள் மீது நடவடிக்கை

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதுபற்றி கேள்வி கேட்டால் பொதுமக்கள் காதில் பூ சுற்றும் வகையில் அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிக்கின்றனர். இதை வலியுறுத்தும் வகையில் காதில் பூ சுற்றிக்கொண்டும், இதுவரை அளித்த மனுக்களை மாலையாக அணிந்துக்கொண்டும் வந்தோம் என்றனர். தொடர்ந்து அந்த இயக்கத்தினர் அளித்த மனுவில், மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை சீராக அமல்படுத்தி வருகிறது. 

ஆனால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் சிலர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. அது குறித்து கேட்டால் பொதுமக்களுக்கு முறையான பதில் அளிக்காமல் ஒருமையில் பதில் கூறுகின்றனர். எனவே மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story