விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 70 கிலோ கஞ்சா பறிமுதல்


விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 70 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2022 9:49 PM IST (Updated: 14 March 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே விற்பனைக்கு கஞ்சா பதுக்கிவைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே விற்பனைக்கு கஞ்சா பதுக்கிவைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவல்

கோவை மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, கள்ளச்சாராயம், போதை பொருள் உள்ளிட்டவைகளை பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார்  தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில், சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரச்சலில் வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விற்பனை செய்வதாக சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாத்தையனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து அவர் மற்றும் சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குப்புராஜ், ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அதிரடியாக செலக்கரச்சலில் முகாமிட்டு சோதனையை தீவிரப்படுத்தினர். 

70 கிலோ கஞ்சா பறிமுதல்

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மஞ்சள் பையுடன் சுற்றிதிரிந்தவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த சிப்ரம் மஹாராணா (வயது 40) என்பதும், அந்த பையில் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஒடிசாவைச் சேர்ந்த மேலும் ஒருவரான சுதர்சன் புஹான் (41) என்பவரும் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் வடமாநிலங்களில் கஞ்சாவை வாங்கி ரெயில் மூலம் இங்கு கொண்டு வந்து பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததும், அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், செலக்கரிச்சல் லட்சுமி நகரில் உள்ள வீட்டில் சுமார் 30 பண்டல்களில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Next Story