கட்டிடம் கட்டும் பணியின் போது நடைபாதை படிக்கட்டு தடுப்புச்சுவர் சரிந்து விழுந்தது


கட்டிடம் கட்டும் பணியின் போது நடைபாதை படிக்கட்டு தடுப்புச்சுவர் சரிந்து விழுந்தது
x
தினத்தந்தி 15 March 2022 5:12 PM IST (Updated: 15 March 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கட்டிடம் கட்டும் பணியின் போது நடைபாதை படிக்கட்டு மற்றும் தடுப்புச்சுவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை

வால்பாறையில் கட்டிடம் கட்டும் பணியின் போது நடைபாதை படிக்கட்டு மற்றும் தடுப்புச்சுவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

வால்பாறையில் மண்சரிவு

கோவை மாவட்டம் வால்பாறை துளசிங்நகர் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் ஒருவர் கட்டிட பணியினை மேற்கொண்டு வருகிறார். இதற்காக மண் வெட்டி எடுக்கும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மண் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் பெரியளவிலான மண்சரிவு ஏற்பட்டது. 
இதனால் துளிசிங்நகர் குடியிருப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு வரும் நடைபாதை படிக்கட்டு மற்றும் தடுப்புச்சுவரும் சரிந்து விழுந்தது. இதனால் குடியிருப்பு பகுதி மக்களின் நடைபாதை துண்டிக்கப்பட்டது. மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மேல் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

பெரும் விபத்து தவிர்ப்பு

இதுபற்றி அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு  சென்று மண் சரிந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பத்தை போர்க்கால அடிப்படையில் உதவி பொறியாளர் கார்த்தி தலைமையில் மின் வாரியத்தினர் ஆபத்து ஏற்படுவதற்கு முன் அகற்றி மின் இணைப்பை சரிசெய்தனர்.
இதனாலும், மண் சரிவு ஏற்பட்ட போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

ஆய்வு செய்ய வேண்டும்

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- வால்பாறை பகுதியில் காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் இருந்து வால்பாறை தீயணைப்பு நிலையம் வரை இரண்டு பக்கத்திலும் போக்குவரத்திற்கு இடையூராக பலர் வீடுகள் கட்டியுள்ளனர்.
இதனால் காமராஜ் நகர் பகுதியில் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் முறையாக கழிவுநீர் சாக்கடைகளும் அமைக்கப்படாததால் சாக்கடை தண்ணீர் சாலையில் சென்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கட்டிட பணிகள் நடைபெறும் இடங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மேலும், வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவினர் வால்பாறை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் கட்டிட பணிகளில் உள்ள விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மண்சரிவின் போது மின் கம்பம் சாய்ந்து சாலையில் விழுந்திருந்தால் பெரியளவிலான உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். இப்போதும் அருகில் உள்ள வீடுகளுக்கு ஆபத்தான சூழ்நிலையே நிலவுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story