முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 10 பேர் மீது வழக்கு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 10 பேர் மீது வழக்கு
கோவை
எஸ்.பி.வேலுமணி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58¼ கோடிக்கு சொத்து சேர்த்து உள்ளதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக முதல்தகவல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து மதிப்பு பட்டியல் படி கடந்த 27.4.2016-ம் ஆண்டு முதல் 15.3.21 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 என அதிகமாக சேர்த்து உள்ளார். இது 3 ஆயிரத்து 952 சதவீதம் அதிகமாகும்.
மேலும் அவர் கோவை, திருப்பூர், சேலம், சென்னை மற்றும் கேரளா உள்பட பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியிருப்பது தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது அண்ணன் எஸ்.பி.அன்பரசன், எஸ்.பி.அன்பரசனின் மனைவி ஹேமலதா, முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவர்த்தன், சரவணக்குமார் ஆகிய 10 பேர் மீது கூட்டுச்சதி (120 பி), மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 3 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எஸ்.பி.வேலுமணி 23.5.2016-ம் ஆண்டு முதல் 6.5.2021-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார். அதன்மூலம் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து உள்ளது தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது பல தகவல்கள் தெரிய வந்தன. அவர் சில நிறுவனங்கள் தொடங்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார். இதன்படி அவர் ரூ.58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 அளவுக்கு சொத்துக்கள் சேர்த்து உள்ளார். அவர் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த பணத்தை வேறு நிறுவனங்களில் திருப்பி விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் அவர் அமைச்சராக இருந்த போது கடந்த 2019-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு 3 முறை பயணம் செய்து உள்ளார். அப்போது அவர் 14 நாட்கள் அங்கு தங்கியுள்ளார். மேலும் அவர் மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்து உள்ளார். இதுதவிர அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து உள்ளனர். அவர்கள் ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளனர்.
குறிப்பிட்ட ஒரு நகைக் கடை நிறுவனத்தின் 99 சதவீத பங்குகள் எஸ்.பி.அன்பரசன் மற்றும் அவரது மனைவி ஹேமலதாவின் பெயரில் உள்ளதும். மேலும் அவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் ரூ.10 கோடி அளவிற்கு நிலம் மற்றும் வீடுகள் வாங்கி உள்ளதும் ஆவணங்கள் சரிபார்ப்பில் தெரியவந்து உள்ளது.
இவ்வாறு அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story