மூச்சுத்திணறி தாய், 2 மகள்கள் பலி
மூச்சுத்திணறி தாய், 2 மகள்கள் பலி
துடியலூர்
கோவை துடியலூரை அடுத்த உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 58). இவருக்கு அர்ச்சனா (24), அஞ்சலி (22) என 2 மகள்கள் உள்ளனர். விஜயலட்சுமியின் கணவர் ஜோதிலிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
எனவே 2 மகள்களுடன் விஜயலட்சுமி தனது வீட்டில் வசித்து வந்தார். மூத்த மகள் அர்ச்சனா, பட்டப்படிப்பை முடித்துவிட்டு சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதேபோல் இளைய மகள் அஞ்சலி ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் விஜயலட்சுமியின் உறவினர் ஒருவர், அவருடைய வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை உடைத்து பார்த்தார்.
அப்போது வீடு முழுவதும் தீ விபத்து ஏற்பட்டு, புகை மூட்டமாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்துபெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன், துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார், வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
இதில் வீட்டின் உள்ளே சமையல் அறையில் விஜயலட்சுமியும், அஞ்சலியும் பிணமாக கிடந்தனர். படுக்கை அறையில் அர்ச்சனா, தரையில் பிணமாக கிடந்தார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார், வீட்டுக்குள் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த யு.பி.எஸ். பேட்டரி மின் கசிவால் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு, அதனால் உண்டான புகை மூட்டத்தில் சிக்கி தாயும், 2 மகள்களும் உயிரிழந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story