சோலையாறு, நீரார் அணை நீர்மட்டம் கடும் சரிவு


சோலையாறு, நீரார் அணை நீர்மட்டம் கடும் சரிவு
x
தினத்தந்தி 16 March 2022 9:44 PM IST (Updated: 16 March 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக சோலையாறு, நீரார் அணை நீர்மட்டம் கடுமையாக சரிந்து உள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வால்பாறை

வால்பாறையில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக சோலையாறு, நீரார் அணை நீர்மட்டம் கடுமையாக சரிந்து உள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

கடும் வெயில்

மலைப்பிரதேசமான வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். தற்போது எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. 

குறிப்பாக பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட அணைகளான சோலையாறு, நீரார் மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. கடந்த 240 நாட்களுக்கும் மேலாக 100 அடியை தாண்டி இருந்த சோலையாறு அணை நீர்மட்டம், 33 அடியாக குறைந்து விட்டது. அங்கு கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி முதல் சோலையாறு மின் நிலையம்-1 மட்டும் இயக்கப்பட்டு, 42 மெகா வாட் மின் உற்பத்திக்கு பிறகு வெளியேறும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறக்கப்பட்டு வந்தது. 

1 அடிக்கும் கீழ் சென்ற நீர்மட்டம்

ஆனால் தற்போது சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்தும் நீரார் அணை வறண்டு வருகிறது. 40 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நீர்மட்டம் கடுமையாக சரிந்து 1 அடிக்கும் குறைவாக மாறிவிட்டது. இதனால் அங்கிருந்து சோலையாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும் சுரங்கப்பாதை காய்ந்து கிடக்கிறது. இது தவிர சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டு மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது.

மின் உற்பத்தி

அங்குள்ள தண்ணீரை கொண்டு அடுத்த சில நாட்கள் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் அதற்கு அடுத்த நாட்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வால்பாறை பகுதியில் பெய்யக்கூடிய கோடைமழை, இதுவரை பெய்யவில்லை. இதனால் வறட்சியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story