பன்னாட்டு விமான சேவைகள் வருகிற 27-ந் தேதி தொடக்கம்: சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை உள்பட அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உலகமெங்கும் கொரோனா முதல் அலை காரணமாக பன்னாட்டு விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் முதல் அலை முடிந்த பின் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. ஆனால், பன்னாட்டு விமான சேவைகள் ‘வந்தே பாரத்’ எனும் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தொற்று நாடு முழுவதும் முழுமையாக குறைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் வழக்கமான பன்னாட்டு விமான சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா 3-வது அலை, ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக விமான சேவைகள் இயக்குவது தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 3-வது அலை முடிவுக்கு வந்து இயல்பான சூழ்நிலை திரும்பியுள்ளதால், வருகிற 27-ந் தேதி முதல் பன்னாட்டு விமான சேவைகள் தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் விமான நிலைய ஆணையக அதிகாரிகளும், விமான நிறுவனங்களும் ஈடுபட்டு உள்ளன. இதையொட்டி, பன்னாட்டு சேவைகள் தொடங்குவது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆணையக அதிகாரிகள், குடியுரிமை, சுங்க இலாகா, மத்திய தொழில் பாதுகாப்பு துறை உள்பட அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story