விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்


விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 17 March 2022 7:17 PM IST (Updated: 17 March 2022 7:17 PM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
விளையாட்டு விடுதியில் சேர தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், வருகிற 22-ந்தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் என்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு விடுதி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மாணவர் சேர்க்கை
இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, கையுந்துப்பந்து, பளூதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, கையுந்துப்பந்து, பளூதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜீடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான படிவத்தை வருகிற 22-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story