வாடிக்கையாளர் தகாத வார்த்தையால் திட்டியதால் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வாடிக்கையாளர் தகாத வார்த்தையால் திட்டியதால் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரசாந்த் ஜாய். இவர், நேற்று மதியம் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவை ஆர்டர் செய்தார். ஆர்டரை எடுத்த ஊழியர் சின்ராசு, உணவை டெலிவரி செய்ய அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். ஆனால் அங்கிருந்த காவலாளிகள், அவரை மோட்டார் சைக்கிளுடன் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சின்ராசு, வாடிக்கையாளருக்கு செல்போன் மூலம் தகவலை தெரிவித்து, குடியிருப்பின் வெளியே வந்து உணவை பெற்று கொள்ளுமாறு கூறினார். உடனே செல்போன் இணைப்பை துண்டித்த பிரசாத் சாய், வெளியே வந்து “உணவு டெலிவரி செய்ய வந்தால் சரியாக செய்து விட்டு செல்ல வேண்டியது தானே என்று ஒருமையில் பேசியதுடன், சின்ராசுவை தகாத வார்த்தையால் திட்டியதாகவும்” கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்ராசு, ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்களுக்கு போன் செய்து நடந்த விவரங்களை கூறினார். அங்கு வந்த சக ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நின்று சக ஊழியரை தகாத வார்த்தையால் திட்டியதற்காக பிரசாந்த் ஜாய் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், இதுபற்றி பிரசாந்த் ஜாயிடம் உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story