சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.8 லட்சம் பறிப்பு
சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து, குறைந்த விலைக்கு 2 கிலோ தங்கம் தருவதாக கூறி பெண் டாக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் டாக்டர்
சென்னை விருகம்பாக்கம், சாய் பாபா காலனியை சேர்ந்தவர் வள்ளி (வயது 52). ஓமியோபதி டாக்டரான இவர், புதுச்சேரியில் சொந்தமாக ஓமியோபதி ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவருக்கு தஞ்சாவூரை சேர்ந்த நில தரகர் செல்வக்குமார் அறிமுகம் ஆனார்.
அவர், தனது நண்பர் விமான நிலையத்தில் சுங்கத்துறையில் கமிஷனராக பணி புரிந்து வருவதாகவும், வெளிநாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வந்து பறிமுதல் செய்யப்படும் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அதற்கு வள்ளி சம்மதம் தெரிவித்தார்.
ரூ.8 லட்சம்
இதையடுத்து விருகம்பாக்கத்தில் தான் தங்கி இருந்த விடுதிக்கு வள்ளியை வரவழைத்த செல்வக்குமார், தனது நண்பரான சுங்கத்துறை அதிகாரி என்று கூறி ராம்பிரசாத் என்பவரை வீடியோ கால் மூலம் வள்ளியிடம் பேச செய்தார். வீடியோ காலில் பேசிய ராம்பிரசாத், 2 கிலோ தங்கத்தை ரூ.8 லட்சத்துக்கு தருவதாகவும், அந்த பணத்தை தனது மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தும்படியும் கூறினார்.
அதை நம்பிய வள்ளியும் ரூ.8 லட்சத்தை அவர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் மாலை வரை காத்திருந்தும் சொன்னபடி தங்க கட்டியை தரவில்லை. மீண்டும் ராம்பிரசாத்தை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையில் செல்வக்குமாரும் நைசாக தப்பி ஓடிவிட்டார்.
மோசடி
அதன்பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் வள்ளி, விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்வக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம்பிரசாத், சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து குறைந்த விலைக்கு 2 கிலோ தங்கத்தை தருவதாக கூறி பெண் டாக்டர் வள்ளியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததும், இதுபோல் பலரிடம் சுங்கத்துறை அதிகாரி, போலீஸ் அதிகாரி, ரெயில்வே அதிகாரி போல் நடித்து மோசடி செய்ததும், இதற்கு நில தரகர் செல்வக்குமார் உடந்தை என்பதும் விசாரணையில் தெரிந்தது. தலைமறைவாக உள்ள ராம்பிரசாத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story