நிதி நிறுவன முன்னாள் மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு


நிதி நிறுவன முன்னாள் மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 March 2022 9:34 PM IST (Updated: 18 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுயஉதவிக்குழுவின் கடன் தொகையை கையாடல் செய்த நிதி நிறுவன முன்னாள் மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி

மகளிர் சுயஉதவிக்குழுவின் கடன் தொகையை கையாடல் செய்த நிதி நிறுவன முன்னாள் மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி ஜெயக்குமார் என்பவர் மேலாளராக பொறுப்பேற்றார். பின்னர் அவர், மகளிர் சுயஉதவிக்குழு மையங்களுக்கு சென்று உறுப்பினர்கள் பெற்ற கடன் விவரத்தை ஆய்வு செய்தார். அப்போது 37 உறுப்பினர்கள் கடன் பெறாமல் கடன் பெற்றதாக மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு, ஜெயக்குமார் தகவல் தெரிவித்தார். உடனே நிதி நிறுவனத்தில் தணிக்கை செய்தபோது முன்னாள் மேலாளர் சதீஷ், உதவி மேலாளர் நாகேஸ்வரி பிரியா ஆகியோர் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 37 பேருக்கு சேர வேண்டிய கடன் தொகையான ரூ.14 லட்சத்து 14 ஆயிரத்து 864-ஐ கையாடல் செய்தது தெரியவந்தது.

2 பேர் மீது வழக்கு

இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 பேரையும், நிதி நிறுவன அதிகாரிகள் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள், குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூ.5 லட்சத்து 90 ஆயிரத்து 660-ஐ நிறுவனத்துக்கு திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்து 965-ஐ திருப்பி கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. 

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த பணத்தை திரும்ப கொடுக்காததால் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த நிதி நிறுவனத்தினர் பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் மேலாளர் சதீஷ், உதவி மேலாளர் நாகேஸ்வரி பிரியா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story