ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒப்பந்ததாரருக்கு தலா 3 ஆண்டு சிறை; பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒப்பந்ததாரருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரு:
ரூ.70 ஆயிரம் லஞ்சம்
பெங்களூரு மாநகராட்சியின் அமலாக்கப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சிவக்குமார். இவர், தற்போது ரெயில்வேயில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அமலாக்கப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக சிவக்குமார் பணியாற்றிய போது, கடந்த 2018-ம் ஆண்டில் ஒரு வழக்கில் இருந்து ராகுல் என்பவரை விடுவிக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கி இருந்தார்.
அதாவது ராகுலிடம் இருந்து முதலில் மாநகராட்சி ஒப்பந்ததாரரான சேத்தன் ரூ.20 ஆயிரத்தை வாங்கி, சிவக்குமாரிடம் கொடுத்திருந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து ராகுலிடம் இருந்து சிவக்குமாரும், சேத்தனும் ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றனர். அப்போது ஊழல் தடுப்பு படை போலீசார், சிவக்குமார், சேத்தனை கைது செய்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறைத்தண்டனை
கைதான 2 பேர் மீதும் பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. ஊழல் தடுப்பு படை போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணை நிறைவு பெற்றதால் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது சிவக்குமார், சேத்தன் ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கியது ஆதாரத்துடன் நிரூபணமானதால், அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story