பேரூர் அருகே போலீஸ் நிலைய கதவை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
பேரூர் அருகே போலீஸ் நிலைய கதவை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
பேரூர்
பேரூர் அருகே போலீஸ் நிலைய கதவை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வனவிலங்குகள்
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வறட்சி காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் மலையடிவார கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு வருகிறது. இதனால் யானை மனித மோதல் நிகழ்கிறது.
இந்த நிலையில் கோவை- சிறுவாணி ரோடு காருண்யாநகர் பகுதியில் காருண்யா நகர் போலீஸ் நிலையம் உள்ளது.
அங்கு இரவு 11 மணி அளவில் போலீசார் ரோந்து பணிக்காக புறப்பட்டுச் சென்றனர். போலீஸ் நிலையத்தில் ஒரே ஒரு பெண் காவலர் மட்டும் பணியில் இருந்துள்ளார்.
அவர் போலீஸ் நிலையத்தின் முன் பக்க கதவை அடைத்துவிட்டு உள்ளே அமர்ந்திருந்தார்.
இரும்புக்கதவை உடைத்தது
அப்போது போளுவாம்பட்டி வனச்சரகம் பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று காருண்யா நகர் பகுதிக்கு வந்து உள்ளது.
அது, நள் ளிரவு 12 மணியளவில் போலீஸ் நிலைய வளாகத்தின் முன்புற இரும்புக் கதவை காலால் உதைத்தது. இதில் அந்த இரும்புக்கதவு உடைந்து வளைந்தது.
அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் வேகமாக வெளியே எட்டிப்பார்த்தார். அங்கு காட்டு யானை நின்று கொண்டு இருந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர், போலீஸ் நிலையத்தின் கதவை பூட்டிக் கொண்டார்.
பின்னர் அவர், கட்டுப்பாட்டு அறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
பரபரப்பு
இதற்கிடையே இரும்புக்கதவை உடைத்த காட்டு யானை போலீஸ் நிலைய வளாகத்திற்குள் வந்து நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த வனத்துறையினர், காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த காட்டு யானை சிறிதுநேரம் அங்கேயே சுற்றி வந்தது.
பின்னர் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் போட்டிருந்த வேலியை உடைத்து கொண்டு காட்டு யானை வனப்பகுதி நோக்கி சென்றது. இதனால் போலீசார் மற்றும் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
போலீஸ் நிலைய இரும்புக்கதவை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story