ஆழியாறில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
ஆழியாறில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. மலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ அணை அமைந்து உள்ளது. இதை தவிர அணைக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அணை மற்றும் பூங்காவிற்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
வழக்கமாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஆழியாறு களைகட்டும். இதற்கிடையில் தற்போது கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி விட்டதால் பொள்ளாச்சி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதன் காரணமாக அணை, பூங்கா பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மூலம் வரும் வருவாயை நம்பி உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் மழை இல்லாததால் ஆழியாறை அடுத்து உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை தடுக்க நுழைவு வாயில் மூடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆழியாறு, டாப்சிலிப் பகுதிகளுக்கு வருவது குறைந்து விட்டது.
இதனால் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பகுதியான வால்பாறைக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
Related Tags :
Next Story