பயணிகளை ஊக்குவிக்க ரூ.2 ஆயிரம் பரிசு கூப்பன்- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்


பயணிகளை ஊக்குவிக்க ரூ.2 ஆயிரம் பரிசு கூப்பன்- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
x
தினத்தந்தி 20 March 2022 4:52 PM IST (Updated: 20 March 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

பயணிகளை ஊக்குவிக்க ரூ.2 ஆயிரம் பரிசு கூப்பன் வழங்கப்படும் எனவும், மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில் டிக்கெட் பெற வசதி செய்யப்பட்டு வருவதாகவும் மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரூ.2 ஆயிரம் பரிசு கூப்பன்

சென்னை மெட்ரோ ரெயிலில் இதுவரை சுமார் 10.50 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுவரை மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ஆதரவு அளித்துவரும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, சில திட்டங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. திட்டங்களின் விவரம் வருமாறு:-

* ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும். இதுதவிர மேலும் 30 நாட்களுக்கு விருப்பம் போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கப்படும்.

* மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1,500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளை தேர்ந்தெடுத்து, மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி, 10 பயணிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

* அதேபோல், பயண அட்டை வாங்கிய 10 பயணிகளை தேர்ந்தெடுத்து, மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி, அதில் குறைந்தபட்சமாக ரூ.500-க்கு ‘டாப்-அப்’ செய்திருந்தால் ரூ.1,450 மதிப்புள்ள இலவச ‘டாப்-அப்’ மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

மின்சார ரெயில் டிக்கெட்

மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், 16 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ரேபிடோ பைக்’, ‘உபர் ஆட்டோ’ மற்றும் கார், ஸ்மார்ட் பைக் வசதிகளும், 12 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இணைப்பு பஸ்கள், 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரெயிலின் டிக்கெட்டை, எழும்பூர், சென்டிரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களிலேயே பெறும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வசதிகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

இதுதவிர சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கு, அந்தந்த நிறுவனங்களே மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இணைப்பு பஸ் வசதிக்கான ஏற்பாடு செய்து வருகிறது. இதுபோன்ற வசதிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்து வருவதால் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story